சினிமா

பாவனா கடத்தலில் திலீப்புக்கு தொடர்பா? மலையாள நடிகர் சலீம்குமார் கருத்து

Published On 2017-06-26 07:50 GMT   |   Update On 2017-06-26 07:50 GMT
பாவனா கடத்தலில் திலீப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து மலையாள நடிகர் சலீம்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி கொச்சிக்கு காரில் செல்லும் போது அவரை சிலர் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பிரபல ரவுடி பல்சர்சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேரை கைது செய்தனர். கைதான பல்சர்சுனில் ஜெயிலில் இருந்தபடி நண்பர் மூலம் நடிகர் திலீப்பிடம் ரூ. 1½ கோடி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.

ஜெயில் முத்திரையுடன் கூடிய அந்த கடிதம் சமூக ஊடகங்களிலும் பரவியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். இதில் மிரட்டல் கடிதத்தில் காணப்பட்ட கையெழுத்து பல்சர் சுனிலின் கையெழுத்து இல்லை என போலீசார் தெரிவித்தனர்.


எனவே இக்கடிதம் குறித்து போலீசாரிடம் புகார் செய்த நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினரும், இயக்குனருமான நாதிர்ஷா, திலீப்பின் மானேஜர் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பி உள்ளது. அவர்களில் திலீப்புக்கு ஆதரவாக சிலரும், பாவனாவுக்கு ஆதரவாக சிலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் திலீப்பை ஆதரித்து மலையாள காமெடி நடிகர் சலீம்குமார் பேஸ்புக்கில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-

நடிகை கடத்தல் விவகாரம் தொடர்பாக இப்போது வெளியாகி வரும் தகவல்கள் நடிகர் திலீப்பின் தனிப்பட்ட வாழ்க்கையை சீர்குலைக்க நடக்கும் முயற்சிகளாகும். இந்த கதைக்கு யாரோ திரைக்கதை எழுதுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதைக்கு கிளைமாக்ஸ் எழுதப்பட்டது. அதன்படி 2013-ம் ஆண்டு கதையில் முக்கிய டுவிஸ்ட் ஏற்பட்டது. அது திலீப்- மஞ்சுவாரியர் விவகாரத்து முடிந்தது. இப்போது நடிகை கடத்தப்பட்ட விவகாரம் கிளம்பி உள்ளது.

திலீப் குற்றவாளி என்றால் அவரை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பல்சர்சுனில் மற்றும் நடிகை பாவனா ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். இதன் மூலம் உண்மை வெளிப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதற்கிடையே குற்றவாளி பல்சர்சுனிலின் வங்கி கணக்கு பணம் பரிமாற்றம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது தாயாரிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள் ளது.

Tags:    

Similar News