சினிமா

வறுமையில் வாடும் பி.எஸ்.வீரப்பாவின் மகனுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கலைப்புலி எஸ்.தாணு

Published On 2017-04-27 06:19 GMT   |   Update On 2017-04-27 06:19 GMT
வறுமையில் வாடும் பி.எஸ்.வீரப்பாவின் மகன் பி.எஸ்.வீ.ஹரிஹரனுக்கு உதவி செய்யும் வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரூ.1 லட்சம் மதிப்பிலான வரைவோலையை வழங்கி இருக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
`மகாதேவி', `மன்னாதி மன்னன்', `வஞ்சிக்கோட்டை வாலிபன்', `மீனவ நண்பன்', `மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்' போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்தவர் பி.எஸ்.வீரப்பா. பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் `ஆந்த ஜோதி', `ஆலயமணி', `ஆண்டவன் கட்டளை', `நட்பு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

பி.எஸ்.வீரப்பாவின் மகன் பி.எஸ்.வீ.ஹரிஹரன் என்பவரும் தயாரிப்பாளர் தான். ஆனால் பி.எஸ்.வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.

ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் வீரப்பா இழந்துவிட்டார். இதில் வாடகை வீட்டில் வசித்து வரும் வீரப்பாவின் மகன் பி.எஸ்.வி.ஹரிஹரனுக்கு, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செலுத்த முடியவில்லை. வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர் நிர்பந்தப்படுத்தி இருக்கிறார்.



இதுகுறித்து தகவல் அறிந்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தாமாகவே முன்வந்து ரூ.1 லட்சத்துக்கான வரைவோலையை பி.எஸ்.வி.ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். அதனை பி.எஸ்.வி.ஹரிஹரன் வசிக்கும் முகலிவாக்கம் வீட்டுக்கே சென்று கலைப்புலி தாணு சார்பில், டைமண்ட் பாபு மற்றும் சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர்.

பெரும் நடிகராக இருந்து சம்பாதித்ததை, தயாரிப்பாளராகி இழந்து வாடும் பி.எஸ்.வீரப்பா குடும்பத்துக்கு, நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று தாணு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News