சினிமா

நாயகன் பின்னால் நாயகி ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொண்டு திரிவதை நிறுத்துங்கள்: ஜோதிகா வேண்டுகோள்

Published On 2017-04-24 12:00 GMT   |   Update On 2017-04-24 12:00 GMT
இன்று சென்னையில் நடைபெற்ற ‘மகளிர் மட்டும்’ ஆடியோ விழாவில் ஜோதிகா இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது, பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறியதாவது: உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மாதிரியான கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள். நாயகர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நாயகர்கள் பேசும் வசனங்கள், ஸ்டைல் என எல்லாவற்றையும் தொடர்வார்கள். சினிமாவில் நடப்பவை இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.



வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என்பது தெரியும். தயவு செய்து கொஞ்சம் அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். நகைச்சுவை நடிகர் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் 'ஐ லவ் யூ' என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள்.

ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் எதற்கு? ஒரு நாயகி போதுமே. நான்கு நாயகிகள் வைத்தீர்கள் என்றால் இளைஞர்கள் நாமும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம் என்றார்.

Similar News