சினிமா

தனுஷ் யார் மகன்? என்ற சர்ச்சையில் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2017-04-21 05:55 GMT   |   Update On 2017-04-21 05:55 GMT
தனுஷ் யாருடைய மகன்? என்று மதுரை ஐகோர்ட் கிளையில் கதிரேசன்-மீனாட்சி தம்பதியனர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரிடம் இருந்து ஜீவானம்சம் பெற்றுதர நடவடிக்கை எடுக்கக்கோரி மேலூர் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பு சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுசின் அங்க அடையாளங்களை சரி பார்க்க உத்தரவிட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தனுசின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர்.



மேலும், கதிரேசனின் வக்கீல் டைட்டஸ், தனுஷ் சார்பில் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போடப்பட்டுள்ள தனுசின் கையெழுத்து போலியானது என்று மற்றொரு வழக்கையும் போட்டியிருந்தார். இப்படியாக தனுஷ் யாருடைய மகன் என்ற வழக்கு பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து வந்தது.

இந்நிலையில், தனுஷின் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கதிரேசன்-மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். இதன்மூலம் நீண்ட நாட்களாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வந்த இந்த வழக்கில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Similar News