சினிமா

இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து

Published On 2017-04-11 05:42 GMT   |   Update On 2017-04-11 05:42 GMT
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் அக்டோபர் 24-ந்தேதி வழக்கு தொடர்ந்தனர்.

ராமேசுவரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை பின்னர் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேரில் ஆஜராகி வந்தனர்.



இந்தநிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது இயக்குனர் அமீர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கை விசாரித்த நீதிபதி ராம், இயக்குனர் அமீருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் ராமநாதபுரம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) ராம் முன்னிலையில் ஆஜரான இயக்குனர் அமீர் தனது மீதான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Similar News