சினிமா

தமன்னாவுடன் போட்டியா?: அனுஷ்கா பேட்டி

Published On 2017-04-10 06:19 GMT   |   Update On 2017-04-10 06:19 GMT
‘பாகுபலி-2’ படத்தில் நடித்தபோது தமன்னாவுக்கும், தனக்கும் போட்டி ஏற்பட்டதா? என்பது குறித்து நடிகை அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நடிகை அனுஷ்கா படம் பற்றி கூறியதாவது:-

“பாகுபலி படத்தின் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால் அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. முதல் பகுதியில் தமன்னாவுக்கு அதிக காட்சிகளும், எனக்கு குறைவான காட்சிகளும் இருந்தன. இரண்டாம் பாகத்தில் நான் அதிக காட்சிகளில் வருகிறேன். என் வாழ்க்கையில் பாகுபலி முக்கிய படமாக இருக்கும்.

5 வருடங்கள் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் நடிகர்-நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்து இருக்கிறோம். ‘பாகுபலி-2’ படத்தில் நான் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருக்கிறேன். இதற்காக சண்டை பயிற்சியாளர்கள் வைத்து பல மாதங்கள் சண்டை கற்றேன். வாள் சண்டை பயிற்சியும் எடுத்தேன். கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்தேன்.



இதில் நடித்தது பெரிய சவாலாக இருந்தது. தமன்னா எனது மருமகளாக நடித்து இருக்கிறார். படப்பிடிப்பில் எனக்கும், தமன்னாவுக்கும் இடையே யாருக்கு முக்கியத்துவம் என்பதில் போட்டி நிலவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. போட்டி மனப்பான்மை எங்களுக்குள் இல்லை. மகிழ்ச்சியாகவே நடித்தோம். இரண்டு கதாநாயகிகள் கதையில் நடித்து இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை கதைக்கும் எனது கதாபாத்திரத்துக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.

நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நடிக்க சம்மதிப்பேன். அந்த படத்தில் எத்தனை கதாநாயகிகள் இருந்தாலும் கவலைப்பட மாட்டேன். பாகுபலி-2 படத்தால்தான் நான் திருமணம் செய்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. திருமணம் நடக்கும்போது நடக்கும்”.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

நடிகை தமன்னா கூறும்போது “பாகுபலி-2’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனது கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன். பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளன. முதல் பாகத்தை விட சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

Similar News