சினிமா

அனைத்து மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் 2-ந்தேதி அவசர ஆலோசனை

Published On 2017-03-29 05:29 GMT   |   Update On 2017-03-29 05:29 GMT
அனைத்து மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் 2-ந்தேதி அவசர ஆலோசனை நடத்துகிறார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
ரஜினிகாந்த், தனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்து பேசுவது வழக்கம். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொள்வார். கடந்த 10 வருடங்களாக இந்த கூட்டங்கள் நடைபெறவில்லை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டுவதும் தேர்தல்களில் ரஜினிகாந்த் படத்தையும் ரசிகர்மன்ற கொடியையும் பயன்படுத்தி பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவதும் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால் சந்திப்புகளை தவிர்த்ததாக கூறப்பட்டது.

ஆனாலும் தனது பிறந்த நாளில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டின் முன்னால் திரளும் ரசிகர்களை பார்த்து வணக்கம் தெரிவித்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தங்களை அழைத்து பேசும்படி ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் அது ஏற்கப்படாமலே இருந்தது.

ஆனால் தற்போது புதிய திருப்பமாக ரசிகர்மன்ற ஆலோசனை கூட்டத்தை கூட்ட ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட ரசிகர்மன்ற தலைவரும் செயலாளரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.



ரஜினிகாந்த் இலங்கை செல்ல திட்டமிட்டது சமீபத்தில் சர்ச்சைகளை கிளப்பியது. தனது 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் யாழ்ப்பானத்தில் கட்டியுள்ள 250 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்ல அவர் முடிவு செய்தார். ஆனால் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் இலங்கை செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுடன் ரஜினிகாந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

“நான் இலங்கை செல்லக் கூடாது என்று இவர்கள் சொன்ன காரணத்தை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்” என்று ரஜினிகாந்த் கூறினார். “இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள தமிழ் மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து தடுத்து விடாதீர்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

“ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை” என்றும் டுவிட்டரில் அறிவித்தார். இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களை 2-ந்தேதி சென்னைக்கு அழைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News