சினிமா

படவாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள்தான் இயக்குனர்களுக்கு கதாநாயகன்: இயக்குனர் பொன்ராம்

Published On 2017-03-28 06:58 GMT   |   Update On 2017-03-28 06:58 GMT
‘ஒரு காதலின் புதுப்பயணம்’ என்ற ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பொன்ராம் பேசியதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய 'ஒரு காதலின் புதுப்பயணம்' ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை இயக்குனர் பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, நடிகர்கள் பிரஜின், நிஷாந்த் தயாரிப்பாளர் இளைய அரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது, ‘இந்த ஆல்பத்தின் இயக்குனர் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை. அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன்- ஹீரோ, எல்லாமே. அதை மறந்துவிடக் கூடாது.



இந்த நான்கு நிமிட பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை இரண்டு முறை போட்டார்கள்.  அதற்குள் பாடல், கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன. இதுமாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான்.

எஸ்.எம் எஸ்.ராஜேஷ்கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக் காட்டி விட்டுத்தான் படவாய்ப்பை பெற்றார். திரையிட்டபோது இதை முதல் முறை பாடலாகப் பார்த்தேன். இரண்டாவது முறை அதில் இருந்த கதையைப் பார்த்தேன். இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள் என்று கூறி வாழ்த்தினார்.

Similar News