சினிமா

டெல்லியில் விவசாயிகள் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திய விஷால் அணியினர்

Published On 2017-03-25 08:44 GMT   |   Update On 2017-03-25 08:44 GMT
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தற்கொலை முயற்சியை விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமைதியான முறையில் நடைபெற்று வரும் இவர்களது போராட்டத்துக்கு மத்திய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.  இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழ் நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவு  தெரிவித்தனர்.



மேலும் அவர்களது கோரிக்கையை மத்திய அமைச்சர்களை சந்தித்து எடுத்துரைப்பதாகவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.  அதனைத்தொடர்ந்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து நதிகள் இணைப்பு குறித்த கோரிக்கையை  அளித்தனர். மேலும் இன்று காலை அருண் ஜேட்லியையும் சந்தித்து விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி விஷால் அணியினர்  வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு செவிமடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்த, விவசாயிகளில் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.



விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இருவரும் தற்கொலை மிரட்டல்  விடுத்தனர். அதனைத்தொடர்ந்து, தற்கொலை செய்ய முயன்ற விவசாயிகளை கீழே இறங்குமாறு பலரும் கேட்டுக்கொண்டனர்.  அந்தநேரத்தில் விஷால் அணியினரும் அங்கு இருந்ததால் விவசாயிகளை கீழே இறங்கச் சொல்லி அவர்களும் வேண்டிக் கொண்டனர்.  பலரது வேண்டுகோளை ஏற்று மரத்தில் இருந்து இரு விவசாயிகளும் கீழே இறங்கி தற்கொலை முயற்சியை கைவிட்டனர்.

Similar News