சினிமா

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை

Published On 2017-03-25 05:07 GMT   |   Update On 2017-03-25 05:07 GMT
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் படம் வெளியான அன்று திருட்டு சி.டி.யை விற்க முடியாது. அந்தளவுக்கு அரசு சினிமாத்துறைக்கு உதவுகிறது. தமிழகத்தில் படம் வெளியான முதல் காட்சி முடிந்த உடனேயே திருட்டு சி.டி. வந்து விடுகிறது. எனவே திருட்டு சி.டி.யை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும்.

நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒருவரே இருந்து நிர்வாகம் செய்வது சரியாக இருக்காது. நடிகர் கால்ஷீட் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டால் அவர் நடிகரை ஆதரிப்பாரா? தயாரிப்பாளருக்கு ஆதரவாக பேசுவாரா?.



10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.

தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்.

விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியலில் ஈடுபடாததால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News