சினிமா

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு விஷால், பிரகாஷ்ராஜ் நேரில் சந்தித்து ஆதரவு

Published On 2017-03-24 11:01 GMT   |   Update On 2017-03-24 11:01 GMT
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்திரில் 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாய  கடனை வசூலிக்க வங்கிகள் விவசாயிகளிடம் கெடுபிடி நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், வறட்சி நிவாரணம், காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. போராடும் விவசாயிகளை துணை  சபாநாயகர் தம்பித்துரை, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் சிலநாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார்கள். மத்திய மந்திரிகளை  விவசாயிகள் சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர்.



ஆனாலும் விவசாயிகள் பிரச்சினைக்கு உடனடியாக எந்த தீர்வும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் வறட்சி நிவாரணமாக  தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.36 ஆயிரம் கோடி கேட்டது. இதற்கு மத்திய அரசு ரூ.2096 கோடியே தருவதாக அறிவித்து  இருப்பதுடன் அதில் ரூ.1,748 கோடியே ஒதுக்கி உள்ளது.

இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டது போல்  இருக்கிறது என்று வேதனையுடன் கூறினார் கள்.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டியராஜ்  ஆகியோர் இன்று டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசின்  கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என்று அவர்களிடம் தெரிவித்தனர்.



பின்னர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக விவசாயிகள் போராட்டம் கவலை அளிக்கிறது. அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க முன்வராதது வேதனை  அளிப்பதாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை நகைளையும், பொருட்களையும் விற்று அடைத்துள்ளனர். சிலர் தாலி  செயினையும் விற்று இருப்பதை அறிந்து வேதனையாக இருக்கிறது.

நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கடன்களை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்த கடன்களை அடைக்க மத்திய அரசால்  மட்டுமே முடியும். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று உடனே தீர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News