சினிமா

இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்

Published On 2017-03-21 04:44 GMT   |   Update On 2017-03-21 04:44 GMT
தமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம் என்று கூறி உள்ள இயக்குனர் தங்கர்பச்சான் இளைஞர்களுக்காக புதிய இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
திரைப்பட இயக்குனரும், தமிழ் ஆர்வலருமான தங்கர் பச்சான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் தமிழ் உணர்வுதான் என்னை எழுத்தாளனாகவும், சமூகப் போராளியாகவும் மாற்றி இருக்கிறது. என்னைப்பற்றியும், என் குடும்பத்தைப்பற்றியும் நினைப்பதைவிட எதிர்கால தமிழ் சமூகத்தைக் குறித்த அக்கறையும், கவலையுமே என்னை ஒவ்வொரு மணித்துளியும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

நெடுங்காலமாகவே ஏதாவது ஒரு பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று என் மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண்டவர்களும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என்று இதுவரை மறுத்து வந்தேன்.

தற்போது உள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூரையாடியவர்களின் எண்ணிக்கையை விடவும் சூரையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்கு உரிமையை சரியாக பயன்படுத்தத் தவறியதுதான்.

வாக்குகளை விலைக்கு விற்காமல் சரியாக பயன்படுத்தி இருந்தால் எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருந்திருக்கும். திருடர்களிடமும், குற்றவாளிகளிடமும் நாட்டைக்கொடுத்துவிட்டு இப்படி நடுத்தெருவில் நின்று புலம்பி கொண்டிருக்க மாட்டோம். இப்படி கண்ணுக்கு எதிரே விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.



படித்து முடித்து வேலை வேண்டி பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இருக்கின்ற 1¼ கோடி இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நம் சிக்கல்களையும், தேவைகளையும் தீர்த்து கொள்கிற ஆட்சியை நம் இளைஞர்களே உருவாக்கிவிட முடியும். அது அமைய வேண்டுமானால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியைத் தந்து நேர்மையானவர்களை அடையாளம் காண்பித்து குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு புரிய வைத்து புதிய அரசியலை உருவாக்க வேண்டியத் தேவை சமூகத்தைப்பற்றிய அக்கறை உடைய ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

நாம் அனைவருமே இதை எல்லாம் உணர்ந்திருந்தாலும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இக்கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் இனியாவது இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஒன்றுபட்டு நம் மக்களுக்கு வாக்கு உரிமையின் வலிமையை உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இனி ‘மக்கள் பணி’ என்பது தங்கர் பச்சான் எனும் தனிப்பட்ட பெயர் கொண்டு இல்லாமல் ஒரு இயக்கத்தின் பெயர் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கான பணியில் உங்களுடன் நாங்களும் இணைந்து கொள்கிறோம் என என் மீது பற்றுள்ள பற்றாளர்களும், இளைஞர்களும் வற்புறுத்துகிறார்கள். அதன் அவசியத்தை நான் புரிந்து கொண்டதன் காரணமாக அதற்கான இசைவை இப்போது அளித்திருக்கிறேன்.

இந்த இயக்கம், இளைஞர்களாகிய உங்களுக்கானது. இதனை உருவாக்கி உங்களிடமே கொடுத்து விட்டு உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட விரும்புகிறேன். அந்த இயக்கத்திற்கான பெயரை நான் தேர்வு செய்வதைவிட மாணவர்களாகிய, இளைஞர்களாகிய, நம் குடிமக்களாகிய நீங்கள் தேர்வு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

முக்கியமாக, பொருளட்ட வேண்டி எல்லைகளைக் கடந்தும், கடல் கடந்தும் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு தமிழ் நிலத்தையும், இம்மக்களையும் பற்றி அக்கறையும், கவலையும் கொண்டிருக்கின்ற நம் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து வழி நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன். அரசியலை வியாபாரமாக கொண்டவர்களை அகற்றுவோம்.

மக்கள் பணியே என்றும் நமது முதன்மைப்பணி. தமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம்.

இவ்வாறு இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

Similar News