சினிமா

ஐந்தே நாட்களில் உருவான மலேசிய தமிழ் படம்

Published On 2017-03-20 10:08 GMT   |   Update On 2017-03-20 10:08 GMT
மலேசியாவில் தமிழ் படம் ஒன்று ஐந்தே நாட்களில் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
முழுக்க முழுக்க மலேசியாவிலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம் ஒன்று அடுத்த மாதம் மலேசியாவில் வெளியாகவிருக்கிறது. RIP என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் வெறும் 1.30 மணி நேரம் ஓடக்கூடியது. இந்த படத்தை 5 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறும்போது, மலேசியாவில் நேரடி தமிழ் படங்கள் கடந்த 7 வருடங்களாகத்தான் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு வயது 100 என்று சொன்னால், மலேசிய தமிழ் சினிமாவுக்கு வயது 7 தான். மலேசியாவில் தமிழ் படங்கள் பார்க்ககூடியவர்கள் 3 முதல் 4 லட்சம் பேர்தான் இருப்பார்கள். அவர்களுக்காக, எவ்வளவு செலவு செய்து படத்தை எடுக்கமுடியும் என்று ஆராய்ந்ததில், குறுகிய பட்ஜெட்டில்தான் படம் எடுக்கமுடியும்



இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்துதான் மலேசியாவில் படங்கள் எடுத்து வருகிறோம். இப்படியான வகையில் உருவானதுதான் ‘RIP’.  இந்த படம் ஒரு மனிதன் வாழும்போது வேலையே கதியென்று எந்நேரமும் அலைந்து கொண்டே இருப்பது, தன்னுடைய உடல் ரீதியாக பிரச்சினை என்றாலும் அதற்கு நேரம் ஒதுக்காமல் இருப்பது, இன்றைக்கு இருக்கக்கூடிய சோசியல் நெட்வொர்க்கின் உள்ளே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு, தன்னுடைய குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை, இப்படியாக ஓடிக்கொண்டே இருக்கிற நாம், கடைசியில் எதை கொண்டு செல்லப் போகிறோம்.



இந்த மாதிரி வாழ்கிற மனிதன் கடைசியில் இறந்தபிறகு அவன் சார்ந்த குடும்பம் என்ன மாதிரியான சூழ்நிலையை சந்திக்கிறது. அவன் இறந்தபிறகு, அவனுடைய ஆத்மா அந்த இடத்தில் இருந்தால் எந்த மாதிரி பீல் பண்ணும் என்பதை இரண்டு நாட்களில் நடைபெறும் கதையாக இதை எடுத்திருக்கிறார்கள்.

மொத்தமே 1.30 மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தை மொத்தமே 5 நாட்கள் படமாக்கியிருக்கிறார்கள். இயக்குனர் மலேசியாவை சேர்ந்தவராக இருந்தாலும், இப்படத்தின் எடிட்டர், கேமராமேன் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள். இந்த படத்தில் ஒரு சோசியல் மெசேஜும் இருக்கிறது.



படம் பார்க்கும் ஒவ்வொருவரும், உடல்ரீதியாக தனக்கு இருக்கும் பிரச்சினையை மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கிறோமா? அதற்கான தீர்வை காண்கிறோமோ? டிஜிட்டல் உலகத்தில் தொலைபேசியிலேயே பாதி நேரத்தை செலவிடுபவர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு சரியான நேரத்தை ஒதுக்குகிறார்களா? என்பது போன்று பல கேள்விகளை எழுப்பி, அவர்கள் வாழ்க்கையில் சிந்தித்து செயல்படுவதற்குண்டான வழிவகைகளையும் செய்யக்கூடிய படமாக இயக்குனர் எஸ்.டி.பாலா எடுத்திருக்கிறார்.

இந்த படம் மலேசியாவில் மட்டும் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஆத்மாவாக எஸ்.டி.பாலா நடித்திருக்கிறார். சுலோச்சனா தேவி, தமிழரசி தனபாலன், சுசானா, சிவாஜி, வேனுமதி பெருமாள், நந்தகுமார், நவீன், சுந்தரா, ராமசுந்தரம் என குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களே நடித்திருக்கிறார்கள். சதீஷ் பி.சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெயராகவேந்திரா இசையமைத்துள்ளார். எடிட்டிங் முத்தராஜ் அருணாச்சலம். கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.டி.பாலா இயக்கியிருக்கிறார்.

Similar News