சினிமா

தரமான படங்களை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்: சூர்யா

Published On 2017-03-16 04:43 GMT   |   Update On 2017-03-16 04:44 GMT
தனித்தன்மை, வித்தியாசமான கதை களத்துடன் வரும் தரமான படங்களை ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்று பட விழாவில் நடிகர் சூர்யா பேசினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
விஜய் மில்டன் இயக்கத்தில் பரத், ராஜகுமாரன், சுபிக்‌ஷா, ராதிகா பிரஷித்தா ஆகியோர் நடித்துள்ள படம் கடுகு. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-

“சென்னையில் புது வீடு கட்டி இருக்கிறேன். அதில் நான், அப்பா, அம்மா, கார்த்தி உள்பட குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வசிக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அனைத்தும் சினிமா கொடுத்தது.

இங்கு இருக்கிற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் சினிமாவால்தான் வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. எல்லாம் கொடுத்த சினிமாவுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்பதற்காகவும், நான் நடிக்காத நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் 2டி பட நிறுவனத்தை தொடங்கினேன்.



முதலில் படம் எடுப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்து, பசங்க-2, 36 வயதினிலே, 24 ஆகிய படங்களை தயாரித்தோம். எப்போதுமே சிறு பட்ஜெட் படங்களில்தான் நல்ல விஷயங்கள் இருக்கும். நானும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து உயர்ந்து இருந்தாலும் மீண்டும் அதற்குள் செல்ல முடியாது. ஆனாலும் என் பட நிறுவனம் மூலம் நல்ல கதையம்சம் உள்ள படங்களை திரைக்கு கொண்டு வர அவர்களுடன் கைகோர்த்து இருக்கிறேன்.

கடுகு படம் பார்த்தேன். பிடித்து இருந்தது. நல்ல படம். எனவே அதை வாங்கி வெளியிட முடிவு செய்தேன். தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே பாலமாக இருக்க விரும்புகிறேன். இந்த படம் ஒரு புது முயற்சி. நடிகர்-நடிகைகள் அனைவரும் புதிய பரிமாணத்தில் தெரிவார்கள். கதாபாத்திரத்தை முன்வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும். அதில் ஈர்ப்பும் வரும். அப்படித்தான் நந்தா படத்தில் நடித்தேன்.

தனித்தன்மையுடன் வித்தியாசமான கதையம்சத்தில் வரும் படங்களை ரசிகர்கள் வரவேற்கிறார்கள். சிறிய படம். பெரிய படம் என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அந்த வகையில் கடுகு படத்தையும் வரவேற்பார்கள். உங்களுக்கு உங்களை பிடித்தால்தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும். அதுதான் கடுகு படத்தின் கதை”.

இவ்வாறு சூர்யா பேசினார்.

Similar News