சினிமா

சாவித்ரி படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது

Published On 2017-03-12 10:05 GMT   |   Update On 2017-03-12 10:05 GMT
பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
1950, 60, 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சாவித்ரி. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். இதனால், சினிமா உலகம் அவரை நடிகையர் திலகம் என பெயர் சூட்டி மகிழ்ந்தது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். சிவாஜியும், சாவித்ரியும் சேர்ந்து நடித்த ‘பாசமலர்’ படம் காலத்தால் அழியாத காவியம் ஆகும்.

இந்நிலையில், மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராக இருக்கிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள். இதில், கீர்த்தி சுரேஷ்தான் சாவித்ரியாக நடிப்பார் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர்.



சமந்தாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், தற்போது சமந்தாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, சமந்தா இப்படத்தில் சாவித்ரி காலத்தில் நடித்துவந்த மற்றொரு நடிகையான ஜமுனா ராணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சாவித்ரி நடித்து வந்த காலத்தில் அவருக்கு சக போட்டியாளராக ஜமுனா ராணி திகழ்ந்துள்ளார். இருவருக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News