சினிமா

ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்

Published On 2017-03-10 08:18 GMT   |   Update On 2017-03-10 08:18 GMT
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்தது குறித்து இயக்குனர் சாய்ரமணி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்ஸுக்கு அளிக்கப்பட்ட இந்த பட்டத்தை யார் வழங்கியது? என்பது பலரது கேள்வியாக எழுந்தது. மேலும், ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.

இந்நிலையில், திரையில் தோன்றிய ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தார். மேலும், அந்த பட்டத்தை தனக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குனர்தான் அளித்ததாகவும், அந்த பட்டம் தான் தகுதியானவன் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், இயக்குனர் சாய் ரமணியும் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வழங்கியது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, என் படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ் அவர்களின் நற்செயல்களையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்த பட்டம் அவரை ஆச்சர்யப்பட வைக்கவில்லை. என்னை உடனே கூப்பிட்டு கண்டித்ததது மட்டுமில்லாமல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்றும், எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

படத்தில் வரும் அந்த பட்ட பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில்கொண்டு மன்னித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Similar News