சினிமா

பாவனா வழக்கில் முக்கிய தடயம் சிக்கியது

Published On 2017-03-10 04:53 GMT   |   Update On 2017-03-10 04:53 GMT
நடிகை பாவனா வழக்கில் முக்கிய தடயம் சிக்கி இருப்பதாக கேரள உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பிரபல நடிகை பாவனா, கேரளாவில் கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சொகுசு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு கும்பலினால் கடத்தப்பட்டு, 2 மணி நேரம் காரிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். குற்றவாளிகள் அதை செல்போனில் புகைப்படங்களாகவும், வீடியோ படமாகவும் எடுத்தனர்.

இந்த சம்பவம், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் பல்சர் சுனி, நடிகை பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், வி.பி. விகீஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடிகை பாவனா கடத்தி, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது பல்சர் சுனியின் சதியாலும், மார்ட்டின் உதவியாலும் நடத்தப்பட்டதாகும்.



இந்த சம்பவத்தின் நோக்கம், மிரட்டி பணம் பறிப்பதுதானே அன்றி வேறல்ல. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆதாரத்தை (டிஜிட்டல் ஆதாரம்) நாங்கள் கைப்பற்றி விட்டோம்” என கூறினார்.

இந்த சம்பவத்தை படம் பிடிக்க பயன்படுத்திய செல்போனை ஆற்றில் வீசி விட்டதாக குற்றவாளிகள் கூறியதும், அதை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களை கொண்டு போலீஸ் தேடியதும் நினைவுகூரத்தகுந்தது.

தொடர்ந்து அவர் கூறும்போது, “இந்த வழக்கில் எங்களது விசாரணை மீது நம்பிக்கை இல்லாதபட்சத்தில், சி.பி.ஐ. வேண்டுமானால் விசாரணை நடத்தட்டும். நாங்கள் அதை வரவேற்கிறோம்” என குறிப்பிட்டார்.

Similar News