சினிமா

நெடுவாசல் போராட்டம் வெற்றி பெறும்: இயக்குனர் தங்கர்பச்சான்

Published On 2017-02-28 05:09 GMT   |   Update On 2017-02-28 05:09 GMT
இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெறும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அதில் பங்கேற்றார். மேலும் நல்லாண்டார்கொல்லையில் எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய், தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவு எண்ணெய், கோட்டைக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் ஆகியவற்றை பார்வையிட்டார். நல்லாண்டார்கொல்லையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தங்கர்பச்சான் பேசியதாவது:-

நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். அதனால் தான் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக சோதனை நடந்த போது 2 ஆயிரம் அடி ஆழம் வரை மண்ணில் தோண்டினர். அதில் நிலக்கரி இருப்பதை உறுதி செய்தபின்னர் அந்த பகுதி பொதுமக்களை வெளியேற்றினர். 1956-ம் ஆண்டு அங்கிருந்து பலர் வெளியேறி வெளியூர்களில் அகதிகளாக தங்கினர். எனது உறவினர்களும் பாதிக்கப்பட்டனர்.



நிலக்கரி சுரங்கத்திற்காக நிலம் கொடுத்தவர்களில் பலருக்கு இதுவரை நிவாரணம் கொடுக்கவில்லை. வேலை வாய்ப்பு வழங்கவில்லை. இன்று 3-ம் தலைமுறையாகி விட்டது. நெய்வேலியில் 4-ம் சுரங்கத்தையும் திறந்து விட்டனர். அந்த பகுதியை சுற்றி விவசாயம் வீணாகி போனது. ஜெயங்கொண்டத்தில் அனல் மின் திட்டம் தொடங்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. 17 ஆண்டுகள் ஆகியும் திட்டம் தொடங்கப்படவில்லை. நிலத்தை கொடுத்த குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அந்த பகுதி பாலைவனமாக காட்சியளிக்கிறது. சொந்த கிராமங்களை விட்டு பலர் வெளியூர் சென்றனர். நானும் எனது கிராமத்தை விட்டு சென்னை சென்றதில் எனக்கும் குற்ற உணர்ச்சி உள்ளது.

எதற்காக இந்த விவரங்களை சொல்கிறேன் என்றால், இங்கு நடைபெறும் போராட்டம் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. தமிழக மக்களின் பிரச்சினை. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மாணவர்கள், இளைஞர்கள் உங்களை கைவிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தி வெற்றிக்கொண்டதை போல இந்த போராட்டத்திலும் மாணவர்கள், இளைஞர்கள் உறுதியாக இருப்பார்கள். நெடுவாசல் போராட்டம் வெற்றி பெறும். ஊரை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம். நிலத்தை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News