சினிமா
கரிசல் திரை விழா நிறைவு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசிய போது எடுத்த படம்.

மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு

Published On 2017-02-25 06:13 GMT   |   Update On 2017-02-25 06:12 GMT
மேடை நாடகங்கள் மூலமே நான் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தேன் என்று நடிகர் சிவகுமார் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்ழக தொடர்பியல் துறையும், மனோ மீடியா கிளப்பும் இணைந்து கரிசல் திரை விழாவை கடந்த 2 நாட்களாக நடத்தின. விழாவில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவ, மாணவிகள் நாட்டுப்புற நடனம், குறும்படம், சிறந்த இளம் பத்திரிகையாளர்களுக்கான போட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் முதுகலை பிரிவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை பாரதியார் பல்கலைக்கழகமும் பெற்றது. இளங்கலை பிரிவில் முதல் பரிசை கலசலிங்கம் கல்லூரியும், இரண்டாம் பரிசை ஜே.ஜே கல்லூரியும் பெற்றன.

இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். தொடர்பியல் துறை துணை தலைவர் கோவிந்தராஜூ வரவேற்றார். பதிவாளர் ஜான் டி பிரிட்டோ முன்னிலை வகித்தார்.

விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். இதை தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிவகுமார் பதிலளித்து கூறியதாவது:-

நான் திருநெல்வேலிக்கு 1964-ம் ஆண்டு முதன்முதலில் வந்தேன். இங்கிருந்து 1970-ல் கன்னியாகுமரிக்கு சென்று ஓவியம் வரைந்தேன். மீண்டும் அதே ஆண்டில் கன்னியாகுமரிக்கு சினிமா கதாநாயகனாக நடிக்க சென்றேன். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் அதிக நாட்டம் இருந்தது. 4 வயதில் மணலில் படம் வரைந்தேன்.



நான் 8-ம் வகுப்பு படிக்கும்போது மனிதனின் முதுகெலும்பு படத்தை பள்ளிக்கூட பாடத்தில் வரைந்தேன். இதை பார்த்த ஆசிரியர் ஓவியத்தில் நாட்டம் இருப்பதை அறிந்து என்னை ஊக்கப்படுத்தினார். பிறகு ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.

பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது தந்தை இறந்து விட்டார். எனது தந்தை முகத்தை நான் பார்த்தது இல்லை. 16 வயதில் எனது சகோதரனும் இறந்தார். நான் மிகவும் பின்தங்கிய ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டுமென்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையை 37 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கினேன்.

தற்போது அகரம் அறக்கட்டளை மூலமாகவும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். ஒரு மாணவன் உயர்ந்தால் அவனது பரம்பரையே உயரும். தினமும் மாணவர்கள் 8 டம்ளர் தண்ணிர் குடிக்க வேண்டும் 7 மணி நேரம் தூங்க வேண்டும்.

மேடை நாடகங்கள் தான் என்னை வளர்த்தது. இந்த நாடகங்களில் நடித்துத்தான் நான் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தேன். நான் சரளமாக பேசுவதற்கும், நடிப்பதற்கும் நாடகத்தில் நடித்ததுதான் காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் சிவகுமார் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News