சினிமா

பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை: திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு

Published On 2017-02-23 08:46 GMT   |   Update On 2017-02-23 08:46 GMT
நடிகை பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை என்று நடிகர் திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இதற்கு யார் காரணம், என்று ஆள் ஆளுக்கு கருத்து சொல்ல தொடங்கினர். அப்போது நடிகர் திலீப்புக்கும் பாவனாவுக்கும்  ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. மஞ்சுவாரியாரை திலீப் விவாகரத்து செய்ய பாவனா தான் காரணம் என்று  கூறப்பட்டதையும் சிலர் சுட்டிக் காட்டினர்.

இதுபோல மலையாளத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு திலீப்தான் காரணமென்று பாவனா ஏற்கனவே குற்றம்  சாட்டியதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது. இதன் காரணமாக பாவனா கடத்தலுக்கு திலீப் காரணம் என்று சமூக  ஊடகங்களில் தகவல்கள் பரவியது.



இதை திலீப் மறுத்தார். சமூக ஊடகங்கள் பிரச்சினையை திசை திருப்ப முயல்வதாகவும், போலீசார் விசாரணையை சரியான  கோணத்தில் எடுத்து செல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் பிரபல மலையாள டைரக்டர் பரதன் - நடிகை கே.பி.ஏ.சி. லலிதாவின் மகனுமான சித்தார்த் பரதனுக்கு பாவனா  கடத்தலில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும்,  அங்கிருந்து குற்றவாளி ஒருவரை கைது செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனை சித்தார்த் பரதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாவனா கடத்தலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இது பொய்யான  செய்தி. இத்தகைய செய்திகள்தான் வேகமாக பரவுகிறது. பாவனா கடத்தலுக்கு காரணம் என்ன? இதன் பின்னணியில்  இருந்தவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் என்னை வேண்டுமென்றே இழுத்து எனது பெயரையும், குடும்பத்தின் புகழையும் கெடுக்க சிலர்  நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



சித்தார்த் பரதனின் தாயார் பிரபல நடிகை கே.பி.ஏ.சி. லலிதா கூறியதாவது:-

எங்கள் குடும்பத்தின் புகழை கெடுக்க வேண்டுமென்றே சிலர் இத்தகைய புரளிகளை கிளப்பி விடுகிறார்கள். என் மகனுக்கு இந்த  சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை. அவர், தவறு செய்யவில்லை.

அவர் ஏதாவது குற்றம் செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் பொதுமக்களே அவரை தண்டிக்கட்டும்.

Similar News