சினிமா

அமலாபால்- விஜய் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றம் அனுமதி

Published On 2017-02-21 14:02 GMT   |   Update On 2017-02-21 14:02 GMT
இயக்குனர் விஜய் நடிகை அமலாபால் தம்பதி மனமொத்துப் பிரிய குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
'சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், அதற்கு விஜய்யின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து விஜய்யும், அமலாபாலும் சுமூகமாகப் பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி பூங்குழலி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் - அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, ஒருமனதாக பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரிவு முடிவில் இருவரும் உறுதியாக இருந்ததால் முதன்மை குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அமலாபால்- விஜய் இருவரும் சட்டப்படி இன்று பிரிந்தனர்

Similar News