சினிமா

நடிகர் தனுஷின் அசல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-02-16 05:17 GMT   |   Update On 2017-02-16 05:17 GMT
தனுஷ் எனது மகன் என்று கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடுத்த வழக்கில் இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சினிமா நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். வயதான எங்களுக்கு அவர் பராமரிப்பு செலவுக்கான தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

அவர்கள் பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பினரும், தனுஷ் படித்ததாக கூறப்படும் பள்ளிகளின் வருகைப் பதிவேடு, மாற்றுச்சான்றிதழ்களின் நகல்களை சமர்பித்தனர்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, அசல் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை நாளை (17-ந்தேதி)க்கு ஒத்திவைத்தார்.

Similar News