சினிமா

போராட்டம் முடிந்தது, அனைவரும் வீடு திரும்புங்கள்: ஆர்ஜே பாலாஜி பரபரப்பு பேட்டி

Published On 2017-01-23 08:21 GMT   |   Update On 2017-01-23 09:23 GMT
ஜல்லிக்கட்டு வேண்டி நடத்திய அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. மாணவர்கள் வீடு திரும்புங்கள் என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை காணலாம்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வந்தது. பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை கொண்டு வருவதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்நிலையில், நிரந்தர தீர்வு வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்த வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை போராக்காரர்களை போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து விடுவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் ஒருசிலர் போலீசாருடன் கல்வீச்சு, தள்ளுமுள்ளு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டோம். தற்போது நாம் கொண்டாட வேண்டிய தருணம். போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் ஆர்ஜே பாலாஜியும் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியதாவது,

அறவழியில் போராட்டத்தை தொடங்கிய நாம் வெற்றி பெற்றுவிட்டோம். யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். போராட்டத்தை கைவிடுங்கள். நமது போராட்டத்தின் போது நமக்கு உறுதுணையாக, கண்ணியமாக நம்முடனேயே இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்.

அறவழியில் தொடங்கி பாரட்டுக்களை பெற்ற நமது போராட்டத்தை வன்முறையில் ஈடுபட்டு இறுதியில் கெட்டபெயரை வாங்க வேண்டாம். இந்த போராட்டம் மாபெரும் வெற்றி என்பதைதாண்டி கேவலமான போராட்டம் என்ற கலங்கத்துடன் முடிய வேண்டாம். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வீடு திரும்பிங்கள். போராட்டம் முடிந்தது என்று கூறியுள்ளார்.

Similar News