சினிமா

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டாம்: லாரன்ஸ் பேட்டி

Published On 2017-01-23 07:24 GMT   |   Update On 2017-01-23 07:24 GMT
ஜல்லிக்கட்டுக்காக போராடிய நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் இரவு பகலாக தங்கியிருந்து ஜல்லிக்கட்டு போராட்டக்காரரர்களுக்கு லாரன்ஸ் ஆதரவு தெரிவித்து வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டதோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். மெரினாவில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் லாரன்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து விடுவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு லாரன்ஸ் அளித்துள்ள பேட்டி,

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்து விட்டது. தமிழக பொறுப்பு ஆளுநர் இதனை உறுதி செய்துள்ளார். எனவே யாரும் கடலுக்கு அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.  இந்த தருணம் நாம் கொண்டாட வேண்டிய தருணம் என்று லாரன்ஸ் கூறியுள்ளார். 7 நாட்களாக ஒரே இடத்தில் கஷ்டங்கள், வலிகளை அனுபவித்து நாம் பெற்ற வெற்றி இது. எனவே இதனை நாம் கொண்டாட வேண்டும். இன்று இரவு மெரினாவில் அனைவரும் கூடி கொண்டாடுவோம் என்றும் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News