சினிமா

காதலுக்காக மெரினாவில் கூடிய கூட்டம் இன்று வீரத்திற்காக கூடியுள்ளது: சிம்பு பெருமிதம்

Published On 2017-01-22 04:58 GMT   |   Update On 2017-01-22 04:58 GMT
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்திற்கு வந்த நடிகர் சிம்பு போராட்டக்காரர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கும் இடத்துக்கு நடிகர் சிம்பு வந்தார். போராட்டக்காரர்கள் மத்தியில் நடிகர் சிம்பு ஆவேசமாக பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு நடிகர்கள் வந்தால் ஏற்கமாட்டார்கள், அடிப்பார்கள் என்று கூறினார்கள். இந்த போராட்ட களத்துக்கு நான் நடிகனாக அல்ல தமிழனாக பேச வந்திருக்கிறேன். தமிழன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. நாங்கள் திருப்பி அடித்தால் தாங்கமுடியாது. எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் மாணவர்கள்-இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். என்றும் நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்.

வந்தாரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள். ஆனால் இனி வந்தாரை தமிழகத்தில் ஆளவிட வைக்கக்கூடாது. தமிழகத்தின் நாளைய ஆட்சி, தலைமுறை எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் மனதில் பட்டதை செய்யுங்கள். பெண்ணுக்கு கொடுக்கிற மரியாதை தாய் மண்ணுக்கும் கொடுக்கவேண்டும். இந்த போராட்டம் இதோடு நிறுத்தி விடக்கூடாது. இது வெறும் தொடக்கம் தான்.

காதலுக்காக மெரினாவில் கூட்டம் கூடும். இன்று வீரத்துக்காக மெரினாவில் மக்கள் கூடியுள்ளனர். தாய் நாட்டுக்கும், தாய் மண்ணுக்கும் என்றும் நன்றி உள்ளவனாக இருப்போம். ஜல்லிக்கட்டு நடத்த உறுதி ஏற்போம்.

இவ்வாறு சிம்பு பேசினார்.

Similar News