சினிமா

விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிகள் எடுக்கவேண்டும்: சிபிராஜ்

Published On 2017-01-18 12:46 GMT   |   Update On 2017-01-18 12:46 GMT
சிபிராஜ் விதிமுறைகளுடன் கூடிய ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் சிபிராஜும் தனது ஆதரவு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நமது நாட்டில் விலங்குகள் நல வாரியமும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விலங்குகளை வதைப்பதை பல கஷ்டங்களையும் தாண்டி தடுத்து வருகின்றனர். உதாரணத்திற்கு 90-களில் படப்பிடிப்பின்போது நிறைய மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடிபட்டது, சில நேரங்களில் இறப்பும் நடந்துள்ளது.

ஆனால், தற்போது விலங்குகள் நலவாரியத்தின் கடுமையான விதிகளாலும், வழிமுறைகளாலும் இது பெருமளவுக்கு குறைந்து போயுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு விதிமுறைகளுடன் நடத்த முயற்சிகள் எடுக்கவேண்டுமே தவிர, பாரம்பரியமான அந்த விளையாட்டுக்கே தடை கொடுப்பது சரியான தீர்வல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News