சினிமா

ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம் நமது ஒற்றுமையின் அடையாளம்: ஆர்.ஜே.பாலாஜி

Published On 2017-01-18 05:36 GMT   |   Update On 2017-01-18 05:36 GMT
ஜல்லிக்கட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் நமது ஒற்றுமையின் அடையாளம் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகமெங்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அமைதிப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். சென்னை மெரீனாவிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை நேரில் சென்று தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று நடிகரும், சமூக ஆர்வலருமான ஆர்.ஜே.பாலாஜி, போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்களை சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்தார். அப்போது, மாணவர்களிடையே அவர் பேசும்போது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவரவர் இருக்கும் இடங்களில் இந்தளவுக்கு அமைதியாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாது. யாரையும் அடிக்கவில்லை, பஸ் கண்ணாடியை உடைக்கவில்லை, யாரும் குடித்துவிட்டு இங்கு கலாட்டா பண்ணவில்லை. இருக்கிற ஒவ்வொரு இளைஞர்களும் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.  

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோட அடையாளம் என்றால், இப்போது நடந்து கொண்டிருக்கிற போராட்டம் நம்முடைய எல்லோருடைய ஒற்றுமையின் அடையாளம். இந்த ஒற்றுமை ஜல்லிக்கட்டை நடத்திவிட்டு அதோடு சென்றுவிடுவது கிடையாது. விவசாயி தற்கொலை என்றாலும் இதே கூட்டம்தான் வந்து போராடப் போகிறது. கல்லூரியில் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் அதற்காக இந்த கூடடம் வந்து போராடவிருக்கிறது.

இனிமேல் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. எங்களை ஏமாற்ற நினைத்தால் நாங்கள் போராடுவதற்கு ரோட்டிற்கு வருவோம். எங்களால மற்றவங்களை காப்பற்றுவதற்காக ரோட்டில் வந்து போராட முடியும். எங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கும் எங்களால் போராடமுடியும். அதனுடைய வெளிப்பாடுதான் இது.

நான் தமிழன் என்பதில் எனக்கு ரொம்ப பெருமை. அதேபோல், இந்தியன் என்பதிலும் பெருமை கொள்கிறேன். ஆனால், என்னுடைய தமிழ் என்கிற அடையாளத்தை அழிக்க நினைப்பதற்கு நான் ஒருபோதும் துணை நிற்க மாட்டேன் என்று பேசி முடித்தார்.

Similar News