சினிமா
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நடிகர் சிம்பு தனது தந்தை டி.ராஜேந்தருடன் மவுன போராட்டம் நடத்திய காட்சி.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டி.ராஜேந்தருடன், சிம்பு மவுன போராட்டம்

Published On 2017-01-13 03:14 GMT   |   Update On 2017-01-13 03:14 GMT
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டி.ராஜேந்தருடன், நடிகர் சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். ரசிகர்கள் கருப்பு கொடியுடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், தடையை நீக்க கோரியும் தனது வீட்டின் முன்னால் மவுன போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழர்கள் அனைவரும் இதேபோன்று மவுன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் நடிகர் சிம்பு அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவில் உள்ள தனது வீட்டின் முன்னால் கருப்பு சட்டை அணிந்து சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். அவரது தந்தையும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர், தாய் உஷா, டைரக்டர் ராம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கருப்பு கொடியுடன் திரண்டு இருந்தனர். ‘ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்’, ‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கு’, ‘பீட்டா அமைப்பே வெளியேறு’ என்பன போன்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

அந்த பகுதி முழுவதும் கருப்பு கொடி கம்பங்களும் நடப்பட்டு இருந்தன. மாசிலாமணி தெருவில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசாரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். 10 நிமிடங்கள் சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். அதன் பிறகு போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-

நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்டு எடுக்கவும், காப்பாற்றவும் இந்த மவுன போராட்டத்தை நடத்தி உள்ளோம். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், தமிழர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் சினிமாவில் மட்டும் கதாநாயகன் இல்லை. மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் வீதியில் இறங்கி போராடுகிற மனிதன். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஒரு ஆரம்பம் தான் இந்த போராட்டம். ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். ரசிகர்கள் நீங்கள் முன்னே செல்லுங்கள். உங்கள் பின்னால் நான் வருகிறேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தந்தே தீரவேண்டும். பிரச்சினை செய்தால் வேறு மாதிரி விளைவுகள் ஏற்படும்.

இவ்வாறு சிம்பு பேசினார்.

Similar News