சினிமா

ஜெயலலிதா மரணத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான்

Published On 2016-12-10 11:40 GMT   |   Update On 2016-12-10 11:40 GMT
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து மக்கள் அறிய, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில்  மரணமடைந்தார். இது தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முதல்வர் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொணர வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "செப்டம்பர் 22-ம் தேதிக்கு முதல் நாள்வரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் வரை மருத்துவமனையில் இருந்த முதல்வர் டிசம்பர் 5-ம் தேதி இறந்தார்.

அவரின் மரணத்தில் நிறைய மர்மங்கள் உள்ளன. எனவே இதனை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி முதல்வரின் மர்மத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொணர வேண்டும்.

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பெரிய தலைவர்கள் உட்பட யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் முதல்வருக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. இன்று சிசிடிவி இல்லாத இடங்களே கிடையாது. எனவே மருத்துவமனையில் என்ன நடந்தது என நீதிமன்றம் விசாரித்து அதனை வீடியோவாக வெளியிடலாம்" என்றார்.

Similar News