சினிமா
‘அன்னமிட்ட கை’ பட பாடல் காட்சியில் ஜெயலலிதாவுடன் குழந்தை லூர்துமேரி

நடிகையாக இருந்த போது எனக்கு தாலாட்டு பாடியவர் ஜெயலலிதா: பெண் தொழிலாளி நெகிழ்ச்சி

Published On 2016-12-09 05:15 GMT   |   Update On 2016-12-09 05:15 GMT
நடிகையாக இருந்த போது “எனக்கு தாலாட்டு பாடியவர் ஜெயலலிதா” என்று கேரள மாநிலம் பீர்மேட்டை சேர்ந்த பெண் தொழிலாளி தெரிவித்துள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்தவர் லூர்துமேரி (வயது 47). அப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து சில தகவல்களை அவர் நிருபர்களிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

கடந்த 1971-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்னமிட்ட கை’ என்ற சினிமா படத்தின் பாடல் காட்சிகள் இடுக்கி மாவட்டம் பீர்மேடு குட்டிக்கானம் பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட் பகுதியிலும், வண்டிப்பெரியார் பகுதியிலும் நடந்தது. அப்போது ‘16 வயதினிலே 17 குழந்தையம்மா’ என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதா ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தாலாட்டு பாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அந்த பாடல் காட்சியில் ஜெயலலிதா வைத்திருந்த குழந்தைதான் நான். அவர் கையில் குழந்தையாக தவழ்ந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த சம்பவத்தை நான் வளர்ந்ததும் எனது தாயார் என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஒரு பிரபல நடிகை என்னை கையில் வைத்து தாலாட்டு பாடி உள்ளார் என்று எனது தோழிகளிடம் கூறி மகிழ்ந்தேன்.

மேலும் அதே படத்தில் எனது தந்தையான ஆன்ட்ரூசும் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்துள்ளார். ஒருமுறையாவது சென்னைக்கு சென்று ஜெயலலிதாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முதல்-அமைச்சராக இருந்த அவரை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்ததால் அதற்காக முயற்சிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News