சினிமா

தனுஷ் என் மகன் தான் என்று அனைவருக்கும் தெரியும்: கஸ்தூரிராஜா

Published On 2016-11-26 06:55 GMT   |   Update On 2016-11-26 06:55 GMT
தனுஷ் என் மகன்தான் என்று அனைவருக்கும் தெரியும் என்று டைரக்டர் கஸ்தூரிராஜா பேட்டி அளித்துள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி மீனாட்சி.

இவர்கள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், “பிரபல நடிகர் தனுஷ் 7.11.1985-ல் எங்கள் மகனாக பிறந்தார். கலைச்செல்வன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தோம்.

எங்கள் மகன் ஒன்று முதல் 8-வது வகுப்பு வரை மேலூர் தனியார் பள்ளியிலும், 9, 10-வது வகுப்புகளை மேலூர் அரசு பள்ளியிலும் படித்தான். 11-வது வகுப்பை திருப்பத்தூர் அரசு பள்ளியில் படித்தான். பாதியிலேயே படிப்பை நிறுத்திய எங்கள் மகன் சென்னை சென்று இயக்குனர் கஸ்தூரிராஜாவிடம் பணிபுரிந்தான்.

பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகர் ஆனார். இதையடுத்து எங்கள் மகனை பார்க்க சென்னை சென்றோம். ஆனால் கஸ்தூரிராஜா அனுமதிக்கவில்லை. எனவே மகன் தனுசுடன் எங்களை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்கு வருகிற 12.1.2017 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனுஷ் அப்பா திரைப்பட டைரக்டர் கஸ்தூரிராஜாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இதுபோன்ற ஒரு செய்தியை கேள்விப்படுவதே எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது பதில் சொல்ல தகுதியான வி‌ஷயம் அல்ல.

என்னை எனது நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் 40 வருடங்களாக தெரியும். சிறு வயதில் இருந்தே எனது மகன் தனுசை எல்லோருக்கும் நன்றாக தெரியும். அவருடன் இங்கு படித்த நண்பர்கள் இருக்கிறார்கள்.

மக்களுக்கு பயன்பட வேண்டிய நீதி துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய்யான வழக்குகளால் வீணாகிறதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான பல பிரச்சினைகளை நீதிமன்றம் தீர்க்க வேண்டியது இருக்கிறது. அவற்றை செய்ய விடாமல் இது போன்ற வழக்குகளுக்கு நேரம் வீணடிக்கப்படுகிறதே என்பது எனது கவலை. நீதித்துறையை நான் மதிக்கிறேன். வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு கஸ்தூரிராஜா கூறினார்.

Similar News