சினிமா

சில்லரை பிரச்சினையால் கடவுள் இருக்கான் குமாரு படம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு

Published On 2016-11-10 09:10 GMT   |   Update On 2016-11-10 09:10 GMT
சில்லரை பிரச்சினையால் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்...
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தை அம்மா கிரியே‌ஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கிறார்.

இந்த படம். இன்று திரைக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக இந்த படத்துக்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை 10-ந்தேதி திரையிட தடை எதுவும் இல்லை என்று உத்தரவிட்டார்.

என்றாலும் இந்த படத்தை ரிலீஸ் செய்யவில்லை. இதுகுறித்து இந்த படக்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் ரூ.100, ரூ.50 நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் சினிமா திரையரங்குகளுக்கு மக்கள் செல்வது கடுமையாக பாதித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் பல அரங்குகளுக்கு மக்கள் செல்லாததால் சினிமா காட்சிகள் ரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 150 திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படியொரு சூழலில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட முடியுமா என தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து ஆலோசித்தனர்.

‘இந்த நோட்டுப் பிரச்சினை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படத்தை வெளியிடலாம்‘ என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த படம் வருகிற 17-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் டி சிவா கூறியதாவது:- “எல்லோரும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி வரும் 17-ந் தேதி தமிழகம் மற்றும் உலகெங்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும். அதற்குள் மக்கள் இந்த நோட்டு நெருக்கடியிலிருந்து மீண்டு படம் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

Similar News