சினிமா

படப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி

Published On 2016-11-09 08:20 GMT   |   Update On 2016-11-09 08:20 GMT
ஜி.வி.பிரகாஷும், நிக்கி கல்ராணியும் படப்பிடிப்பின்போது பெரிய விபத்தில் இருந்து உயிர்தப்பினார்களாம். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரித்து ஜி.வி.பிரகாஷ் ஆனந்தி, நிக்கி கல்ராணி நடித்திருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ராஜேஷ். எம் இதை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

இதில் தயாரிப்பாளர் அம்மா கிரியே‌ஷன்ஸ் டி.சிவா பேசும் போது, “அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் தொடங்கி 25 வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டேன். ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தை தயாரித்து இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100 சதவீதம் மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர். நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும்” என்றார்.

இயக்குநர் ராஜேஷ், “ஜி.வி. பிரகாஷ் நடிப்பை ‘திரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தில் பார்த்து இந்த கதையில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த படம் அனைவரும் வந்து பார்க்கும் ஒரு படைப்பாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடித்து ‘யு’ சான்றிதழ் பெற்று வெளிவரும் முதல் திரைப்படம் இது” என்று கூறினார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், “இந்த படத்தில் ஆனந்தி மிகவும் அமைதியான பெண். நிக்கி கல்ராணி ரவுடி பொண்ணு. இந்த படத்திற்காக கார் சேசிங் காட்சி படமானது. நானும், நிக்கி கல்ராணியும் சென்ற கார் மீது துரத்தி வந்த கார் மோதியது. அப்போது எங்கள் கார் உருண்டது. நல்ல வேளையாக இருவரும் உயிர் தப்பினோம். நான் என்னுடைய வாழ்நாளில் வேலை செய்த மிகச்சிறந்த டீம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் டீம் தான். சென்சார் குழுவினர் படம் பற்றி நல்லவிதமாக என்னிடம் கூறினார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

Similar News