சினிமா

மோடி உருவத்துடன் கவர்ச்சி உடை: ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு

Published On 2016-11-05 03:56 GMT   |   Update On 2016-11-05 03:56 GMT
மோடி உருவத்துடன் கவர்ச்சி உடை அணிந்திருந்த இந்தி நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென்று அரசியலில் குதித்த இவர் ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார்.

இவர் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் கொண்டாடிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். விழாவிற்கு அவர் கவர்ச்சி உடை அணிந்து சென்றார்.

அந்த ஆடையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. அந்த ஆடையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள கன்குரோலி போலீஸ் நிலையத்தில் பிரஜித் திவாரி என்ற வக்கீல், ராக்கி சாவந்த் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர், ராக்கி சாவந்த் பிரதமரின் உருவத்துடன் கூடிய கவர்ச்சி ஆடையை அணிந்து பிரதமரை அவமதித்து விட்டதாக கூறி உள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Similar News