சினிமா

15 வருடத்திற்கு பிறகு கமல் படத்திற்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய அந்தஸ்து

Published On 2016-09-30 11:08 GMT   |   Update On 2016-09-30 11:08 GMT
15 வருடத்திற்கு பிறகு கமல் நடித்த ஒரு படத்திற்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது. அது எந்த படம்? என்பதை கீழே பார்ப்போம்..
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆண்டுதோறும் ‘Fantastic Fest’ என்ற பெயரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த விழாவில் கமல் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆளவந்தான்’ படமும் திரையிடப்பட்டது.

இந்த விழாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் திரையிடப்பட்ட படத்தை பார்த்த பலரும் ‘ஆளவந்தான்’ படத்தை பற்றி பெரிதும் வியந்து போயுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ‘ஆளவந்தான்’ படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர்.

‘ஆளவந்தான்’ படம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்ததாகவும், இந்த படத்தை பார்த்து இந்தியா படங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ‘ஆளவந்தான்’ மட்டுமல்லாது மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘கம்மாட்டி’, இந்தியில் வெளிவந்த ‘கல்நாயக்’ ‘ராமன் ராகவ் 2.ஓ’, தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மகதீரா’ ஆகிய படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

‘ஆளவந்தான்’ படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன், அனுஹாசன், ரியாஸ்கான், கொல்லப்புடி மாருதி ராவ், உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கமல் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சங்கர் மகாதேவன்-எசான்-லாய் மூவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். ‘கபாலி’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருந்தார்.

Similar News