சினிமா

ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்

Published On 2016-09-29 12:09 GMT   |   Update On 2016-09-29 12:09 GMT
சிம்ரனின் கணவர் தீபக், குரு சோமசுந்தரத்துக்கு வில்லனாக மாறியுள்ளார். அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்..
சமீபத்தில் வெளிவந்து விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்தவர் குரு சோமசுந்தரம். ஏற்கெனவே, சில படங்களில் இவர் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ‘ஜோக்கர்’ படம் இவருக்கு ஹீரோ அந்தஸ்தை வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவான மற்றொரு படம் இப்போது வெளியாகவிருக்கிறது. ‘ஜோக்கர்’ படத்திற்கு முன்பே உருவான இப்படத்திற்கு ‘ஓடு ராஜா ஓடு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரே நாளில் நடக்கும் கதை.

நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்த நால்வரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது என்ன நேர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

இப்படத்தில் குரு சோமசுந்தரத்துடன் சாருஹாசன், நாசர், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லட்சுமி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக சிம்ரனின் கணவர் தீபக் இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தை நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.

படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் சோகமாகவே காட்சியளிக்கும். அந்த கதாபாத்திரங்களுக்கு வரும் பிரச்சினைகள் அதிகமாக அதிகமாக படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் நகைச்சுவையை உண்டாக்கும். இந்த படத்தை டார்க் காமெடி என்ற புதிய பாணியில் படமாக்கியிருக்கிறார்கள். டோஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஜதின் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் மூலன் என்பவர் தயாரிக்கிறார். 

Similar News