சினிமா

ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் சத்யநாராயணா பேட்டி

Published On 2016-09-26 07:22 GMT   |   Update On 2016-09-26 07:22 GMT
ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது சகோதரர் சத்யநாராயணா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சத்யநாராயணா ரூ.25 ஆயிரம் செலுத்தி, ராமேசுவரம் காசி விஸ்வநாதர் சன்னதியில் 1008 வெள்ளி கலசாபிஷேக பூஜை நடத்தினார். தொடர்ந்து அவர் செங்கோலுடன் கோவிலை வலம் வந்தார். தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், காவிரி பிரச்சினையில் தீர்வு ஏற்படவும், தமிழக-கர்நாடக மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவது எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பார். எந்திரன்-2 படம் வேகமாக தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பூஜையினபோது கோவில் பேஷ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News