சினிமா

ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்

Published On 2016-09-20 04:13 GMT   |   Update On 2016-09-20 04:13 GMT
பிரபல சாமியார் ஓஷோ வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க மோகன்லால் ஆர்வம் காட்டுகிறார். அவரை போன்ற தோற்றத்திலான தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
செக்ஸ் வாழ்க்கையும் ஆன்மிகம் சாந்ததுதான் என்று சர்ச்சை கருத்துகளை சொல்லி பரபரப்பாக பேசப்பட்டவர் ரஜினீஸ் சாமியார். இவரை சீடர்கள் ஓஷோ என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் ஓஷோவுக்கு ஆசிரமங்களும் சீடர்களும் உள்ளனர். ஏராளமான ஆன்மிக புத்தகங்களையும் வெளியிட்டு உள்ளார். நடிகர்-நடிகைகள் பலர் இவரது ஆன்மிக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே பல சாமியார்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது. அதுபோல் ஓஷோவின் வாழ்க்கையையும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஓஷோ வேடத்தில் நடிக்க மோகன்லால் ஆர்வமாக இருக்கிறார். ஓஷோ தோற்றத்தில் தன்னை படம் பிடித்து அதனை டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்ததும், ரசிகர்கள் மோகன்லால் ஓஷோவாக நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

மலையாளத்தில் தயாராகும் ஓஷோ வாழ்க்கை வரலாற்று கதையில் மோகன்லால் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது. மோகன்லாலுக்கு 56 வயது ஆகிறது. 1980-ல் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற மலையாள படத்தில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். தமிழில் இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுவரை 320-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார். 

Similar News