சினிமா

விதார்த்துக்கு அப்பாவாக நடிக்கும் பாரதிராஜா

Published On 2016-09-15 12:14 GMT   |   Update On 2016-09-15 12:14 GMT
விதார்த்துக்கு அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்து வருகிறார். அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக திகழ்பவர் பாரதிராஜா. இவர் சமீபகாலமாக சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாரதிராஜா-விதார்த் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘குரங்கு பொம்மை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தை தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘நாளைய இயக்குனர்’ என்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற நித்திலன் என்பவர் இயக்குகிறார். கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குனர் நித்திலன் கூறும்போது, மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். விதார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் என்ற கேரளா பெண் நடித்திருக்கிறார்.

இப்படம் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து படம் இயக்கியுள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு 59 நாட்கள் நடந்தது. சென்னையை சுற்றியே படம் நகரும்.

படத்தில் மொத்தம் 3 பாடல்கள். இதில் நா.முத்துக்குமார் 2 பாடல்களை எழுதி இருக்கிறார். ‘பீச்சு காத்து பார்சல் என்ன வெல...’ என்ற பாடலும், ‘அண்ணமாறே அய்யாமாறே...’ என்ற பாடல் வரிகள் நா.முத்துக்குமார் எழுதியவை. இப்படத்தின் மூலம் அஜனீஷ் லோக்நாத் என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது.

நடிகர் விதார்த் என்னுடைய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தை பார்த்து என்னை அழைத்தார். என்னை பாராட்டி ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். நானும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதையை கூறினேன். அவரும் கதையை கேட்டு சிறப்பாக இருக்கிறது என்று கூறி படம் இயக்க ஆரம்பித்தோம்.

பின்னர், பாரதிராஜா சாரிடம் நான் கதையை சொல்ல முதலில் தங்கினேன். அவரை சந்தித்து கதையை சொன்னேன். கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்றார். அவர் சரி என்று சொன்ன பிறகு தான் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்னுடைய குறும்படத்தை பாரதிராஜா சார் ஏற்கனவே பார்த்து பாராட்டியிருக்கிறார்.

இப்படம் என்னுடைய முதல் குறும்படமான ‘புதிர்’ தாக்கத்தின் காரணமாக உருவானது என்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாளை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Similar News