சினிமா

தினமும் 20 கிலோ மீட்டர் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் அனுஷ்கா

Published On 2016-08-30 06:23 GMT   |   Update On 2016-08-30 06:23 GMT
அனுஷ்கா தற்போது தினமும் 20 கிலோ மீட்டர் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொள்கிறாராம். அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தில் அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு கைதியாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் அரசியாக நடிக்கவிருக்கிறார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கவிருக்கும் சில காட்சிகளை முதல் பாகம் எடுக்கும்போதே ராஜமௌலி எடுத்துவிட்டார்.

‘பாகுபலி’ முதல்பாகம் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்த நிலையில், அனுஷ்காவுக்கு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. அதைத் தொடர்ந்து ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்க சற்று காலதாமதம் ஆனதால், வந்த வாய்ப்புகளையெல்லாம் வீணடிக்காமல் நடிக்கத் தொடங்கினார்.

அதன்படி, ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி நடித்தார் அனுஷ்கா. வித்தியாசமான முயற்சியாக எடுத்த செய்த அந்த விஷயம் தற்போது அனுஷ்காவுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. தற்போது, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஆனால், இதுவரை அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கவில்லையாம்.

என்னவென்று விசாரிக்கையில், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக அனுஷ்கா ஏற்றிய உடல் எடை இன்னும் குறைந்தபாடில்லையாம். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் இருந்த அனுஷ்காவுக்கும் தற்போது இருக்கும் அனுஷ்காவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதாம். இதனால், அனுஷ்கா தொடர்ந்து தனது உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் களமிறங்கியிருக்கிறாராம்.

இதற்காக, அனுஷ்கா தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயிற்சி செய்து வருகிறாராம். ஐதராபாத்தில் தங்கியிருக்கும் அனுஷ்கா, தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு சைக்கிள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். ராஜமௌலி தற்போது ‘பாகுபலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும் முடித்துவிட  முடிவு செய்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் எடுத்து முடித்த பிறகு அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவார்கள் என தெரிகிறது. அதற்குள் அனுஷ்கா உடல் எடையை குறைத்துவிடுவார் என்று தெரிகிறது. 

Similar News