சினிமா

இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது

Published On 2016-08-30 05:37 GMT   |   Update On 2016-08-30 05:37 GMT
‘இருமுகன்’ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘இருமுகன்’.  இதில் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரமுடன், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, சமீபத்தில் படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியானது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த பாடல்களும், படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, படம் எப்போது வெளியாகும் என பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘இருமுகன்’ படத்துக்கு ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தை வரும் செப்டம்பர் 8-ந் தேதியே வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை ‘புலி’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுள் ஒருவரான சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News