சினிமா

படஅதிபர் மதனை 30-ந்தேதிக்குள் கைது செய்துவிடுவோம்: ஐகோர்ட்டில் போலீஸ் உத்தரவாதம்

Published On 2016-08-19 02:43 GMT   |   Update On 2016-08-19 02:44 GMT
படஅதிபர் மதனை 30-ந்தேதிக்குள் கைது செய்துவிடுவோம் என்று சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகி மதன் கடந்த மே மாதம் மாயமானார். இதையடுத்து அவரை கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் தங்கம், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இடம் வாங்கித்தருவதாக பல மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக மதனுக்கு எதிராக பல புகார்கள் வந்திருப்பதாக போலீசார் கூறினார்கள்.

இதையடுத்து மதன் காணாமல் போன வழக்கையும், அவருக்கு எதிரான வந்த புகார்களையும் விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டு, அவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், ஒவ்வொரு முறையும் ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு வரும்போது, தங்களது புலன்விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசார் விசாரணை திருப்தி அளிப்பதாக கூறினார்கள்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீசார் அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

‘கடந்த முறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களைதான், இந்த அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கருத்து கூறினார்கள். மேலும், புலன் விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதனடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை வேறு ஒரு புலனாய்வு அமைப்புக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் தலைமை வக்கீல் ஆர்.ராஜரத்தினம் ஆஜராகி, ‘புலன் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. விரைவில் மதனை கைது செய்து விடுவோம். அதற்கு 20 நாட்கள் கால அவகாசம் வேண்டும். அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை மாற்றுவது குறித்து இந்த ஐகோர்ட்டு முடிவு செய்யலாம்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித்தருவதாக பல மாணவர்கள், பெற்றோர்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை? இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாகிவிட்டது’ என்று கூறினார்கள்.

மேலும் நீதிபதிகள், ‘பெற்றோர், மாணவர்கள் ஆகியோர் பணத்தை வாங்கியவர்கள், அதற்காக கொடுத்த ரசீதில், சுதிர் என்பவர் கையெழுத்து போட்டுள்ளார். யார் இந்த சுதிர்?, இவரிடம் ஏன் விசாரிக்கவில்லை?. அதேபோல, சண்முகம், பவுலின், அருள் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏன் இதுவரை அவர்களிடம் விசாரிக்கவில்லை?, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உரிமையாளர் பச்சமுத்துவிடம் ஏன் விசாரிக்கவில்லை?, அவரிடம் விசாரிக்க போலீசாருக்கு என்ன தயக்கம்? மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.73 கோடி மோசடி செய்ததாக மொத்தம் 111 புகார்கள் வந்துள்ளன. ஆனால், இதுவரை ஒரு வழக்கு மட்டும்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை மற்றொருவர் 4 வெட்டு வெட்டினால், ஒரு வெட்டுக்கு ஒரு வழக்கு என்று 4 வழக்குகள் பதிவு செய்ய தேவையில்லை. ஆனால், எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்று பல படிப்புகளில் இடம் வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி நடந்துள்ளதாக புகார்கள் வந்திருக்கும்போது, பல வழக்குகளை பதிவு செய்யத்தானே வேண்டும்?, அதை ஏன் போலீசார் செய்யவில்லை? என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள்.

அதற்கு குற்றவியல் வக்கீல், ‘வருகிற 30-ந்தேதி வரை காலஅவகாசம் வேண்டும். அதற்குள் மதனை கைது செய்துவிடுவோம்’ என்று மீண்டும் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Similar News