சினிமா

கபாலி படம் குறித்து சர்ச்சை பேச்சு: வைரமுத்து விளக்கத்தை ஏற்க மறுத்த தாணு

Published On 2016-07-30 08:19 GMT   |   Update On 2016-07-30 08:19 GMT
‘கபாலி’ படம் குறித்து பேசிய சர்ச்சை பேச்சு குறித்த வைரமுத்துவின் விளக்கத்தை தாணு ஏற்க மறுத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ‘கபாலி’ படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும், இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தை இன்னமும் திரையரங்குகளில் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து ‘கபாலி’ படம் தோல்வி என்று பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருடைய தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் அளித்துவிட்டாலும், இதுகுறித்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் இதுகுறித்து கேட்டபோது, அகத்தில் இருந்தது புறத்தில் தெரிந்தது. அவருடைய மனது என்ன நினைத்ததோ அதுதான் வாய் வழியாக வந்துள்ளதாக நான் கருதுகிறேன். அவர் விமர்சிக்கலாம், அவரை நாங்கள் விமர்சிக்க தயாராக இல்லை என்று கூறினார்.

இதிலிருந்து வைரமுத்துவின் விளக்கத்தை கலைப்புலி தாணு ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

Similar News