சினிமா

கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகரானேன்: விதார்த் பேட்டி

Published On 2016-07-30 06:39 GMT   |   Update On 2016-07-30 06:39 GMT
கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகரானேன் என்று தஞ்சாவூரில் மைனா பட கதாநாயகன் விதார்த் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
மைனா பட கதாநாயகன் விதார்த் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

'குற்றமே தண்டனை' என்ற படத்தை நானே தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறேன். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார்.

இந்த படத்தை 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்து உள்ளார். ஒரு கொலையை முக்கியமாக வைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது.

தவறு செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்ற கருத்தை மையமாக கொண்டுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) திரைக்கு வர உள்ளது.

நான் அடுத்ததாக 'கிடாயின் கருணை மனு' மற்றும் 'குரங்கு பொம்மை' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறேன். 'குரங்கு பொம்மை' படத்தில் பாரதிராஜா அப்பா வேடத்தில் நடிக்கிறார்.

என்னுடைய முதல் படம் 'தொட்டுப்பார்' ஆகும். 2-வது படம் 'மைனா'. இப்படம் மக்கள் மத்தியில் பிரபலமானது. எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை ஆகும்.

நான் 10-வது வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளேன். ஐ.டி.ஐ. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றேன். அங்கு 3 ஆண்டுகள் ஆசிரியராகவும் பணியாற்றினேன்.

அதன் பிறகு கதாநாயகன் ஆனேன். எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. மனைவி பெயர் காயத்ரி தேவி. எனது முதல் தயாரிப்பு படமான 'குற்றமே தண்டனை' என்ற படத்திற்கு ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி தலைவர் அறிவுடை நம்பி உடன் இருந்தார்.

Similar News