சினிமா

மதன் உயிரோடுதான் உள்ளார்: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

Published On 2016-07-29 03:07 GMT   |   Update On 2016-07-29 03:07 GMT
தற்கொலை செய்து கொள்வதாக கூறி மாயமான பட அதிபர் மதன் உயிரோடுதான் உள்ளார் என்று ஐகோர்ட்டில் போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்தார்.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தவர் மதன். இவர், கடந்த மே 28-ல் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். இதுதொடர்பாக அவரது தாயார் தங்கம் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து மதனை கண்டுபிடிக்கவும், அவருக்கு எதிராக பலர் கொடுத்த மோசடி புகார்களை விசாரிக்கவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி, தன்னுடைய புலன் விசாரணை விவரங்களை கொண்ட ஒரு அறிக்கையை செய்தார். அதில், மதனின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘காணாமல் போன மதன், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தற்போது அவரது நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்தவேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கூடுதல் துணை கமிஷனர், ‘இந்த வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணையின் அடிப்படையில், மதன் உயிரோடுதான் உள்ளார். அவர் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டோம். அவரை பிடித்து இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த காலஅவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘மதன் உயிரோடு இருக்கிறார் என்பதில் விசாரணை அதிகாரி முழு நம்பிக்கையுடன் உள்ளார். எனவே, மதனை போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. போலீசாரின் புலன் விசாரணையும் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Similar News