சினிமா

மலையாள நடிகைகளின் விவாகரத்துகள் அதிகரிப்பு

Published On 2016-07-28 03:58 GMT   |   Update On 2016-07-28 03:58 GMT
மலையாள நடிகைகளின் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இது கேரள பட உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அழகும் திறமையும் உள்ளவர்கள் மலையாள நடிகைகள். தமிழ் பட உலகில், இவர்களின் ஆதிக்கம் பத்மினி காலத்தில் இருந்தே தொடர்கிறது. தற்போது நம்பர்-1 கதாநாயகியாக இருக்கும் நயன்தாராவும் கேரளாவில் இருந்து வந்தவர். தெலுங்கு பட உலகமும் மலையாள நடிகைகள் கைக்குள் இருக்கின்றன. அதிக படங்களில் இவர்கள் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்த நடிகைகளில் பலர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு மாறி துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். வரதட்சணை கொடுமை, கணவர் சித்ரவதை, என்று பல்வேறு காரணங்களை சொல்லி விவாகரத்து பெற்று இருக்கிறார்கள். சிலர் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கணவரை உதறி விட்டு வந்துள்ளனர்.

சமீப காலமாக விவாகரத்து செய்யும் மலையாள நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் இருந்து வந்து தமிழில் காசி, சாது மிரண்டால் ஆகிய படங்களில் நடித்த காவ்யா மாதவன் முன்னணி நடிகையாக இருந்த போதே 2009-ல் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடியேறினார்.

ஆனால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே கணவர் தன்னை சித்ரவதை செய்வதாக குற்றம் சாட்டி அவரை பிரிந்தார். 2011-ல் விவாகரத்து செய்து கொண்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

மலையாள நட்சத்திர தம்பதியான திலீப்பும், மஞ்சு வாரியரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 14 வருடமாக சந்தோஷமாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில், 2 வருடங்களுக்கு முன்பு புயல் வீசியது.

மஞ்சு வாரியர் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்பியதை திலீப் எதிர்த்ததாகவும் இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது விவாகரத்து செய்து அவர்கள் பிரிந்துள்ளனர்.

விஷால் ஜோடியாக சிவப்பதிகாரம் மற்றும் குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்து பிரபலமான மம்தா மோகன்தாஸ் 2011-ல் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை மணந்தார். ஆனால் ஒரு வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்தும் செய்து கொண்டார்.

கமல்ஹாசன் ஜோடியாக ‘விக்ரம்’ மற்றும் மனசுக்கும் மத்தாப்பு, ஆனந்த ஆராதனை, பகலில் பவுர்ணமி உள்ளிட்ட படங்களில் நடித்த லிசியும் மலையாள டைரக்டர் பிரியதர்ஷனும் 1990-ல் காதல் திருமணம் செய்து கொண்டு 13 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து இப்போது விவாகரத்து செய்துள்ளார்கள்.

1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஊர்வசி 2000-ல் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதல் திருமணம் செய்தார். இவர்களும் 2008-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

இதுபோல் அவரது சகோதரியான மறைந்த நடிகை கல்பனாவும் அணில் என்பவரை காதல் திருமணம் செய்து பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

இதய திருடன், நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோதிர்மயி 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டு 2011-ல் அவரை விவாகரத்து செய்து விட்டார்.

நடிகைகள் கலாரஞ்சனி, லெனா ஆகியோரும் விவாகரத்து செய்துள்ளனர்.

இந்த பட்டியலில் தற்போது அமலாபாலும் இணைகிறார். இவர் 2010-ல் மைனா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். விஜய், விக்ரம், ஜெயம்ரவி, தனுஷ் போன்றோருடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 2 வருடத்துக்கு முன்பு மதராச பட்டனம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்கள் இயக்கி முன்னணி இயக்குனரான விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அமலாபால் குடும்ப வாழ்க்கையிலும் புயல் வீசுகிறது. கணவர் விஜய்யை கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கிறார். விரைவில் அவரை விவாகரத்து செய்ய தயாராகி வருகிறார். சினிமாவில் நடிக்க கணவர் மற்றும் குடும்பத்தினர் தடை விதித்ததாகவும் இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மலையாள நடிகைகள் மத்தியில் விவாகரத்துகள் பெருகி வருவது தங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்று அங்குள்ள நடிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Similar News