சினிமா
ரஜினி அமெரிக்காவில் உள்ள திரையரங்குக்கு வந்த காட்சி

அமெரிக்காவில் ரசிகர்களோடு ‘கபாலி’ சிறப்பு காட்சியை கண்டுகளித்த ரஜினி

Published On 2016-07-21 06:13 GMT   |   Update On 2016-07-21 06:13 GMT
அமெரிக்காவில் ஓய்வெடுத்து வரும் ரஜினி, அங்கு ‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து கண்டுகளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. என்றாலும் அமெரிக்காவில் நேற்று திரையிடப்பட்டது. இதன் முதல் காட்சியை ரஜினி தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்தார். அவரது மகள் சவுந்தர்யாவும் உடன் சென்றுள்ளார்.

‘கபாலி’ படம் திரையிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே ரஜினி தியேட்டருக்கு சென்றார். அவர் வருவதை தெரிந்து கொண்டதும் தியேட்டரில் இருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினி தியேட்டருக்குள் நுழைந்ததும் அங்கு இருந்த ரசிகர்கள் அவரை கைதட்டி வரவேற்றனர். அப்போது ரஜினி ரசிகர்களைப் பார்த்து கும்பிட்டார். பெரும்பாலான ரசிகர்கள் ரஜினியை செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

படம் திரையிடப்பட்ட போது, ரசிகர்களுடன் ரசிகராக ரஜினியும் ‘கபாலி’ படத்தை ரசித்து பார்த்தார். ரஜினி ஸ்டைலாக நடந்து வருவது, கபாலிடா என்று வசனம் பேசுவது, நெருப்புடா பாடல் போன்ற காட்சிகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்ததாக ரஜினியுடன் படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

படம் முடிந்ததும் ஏராளமான ரசிகர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். படம் சிறப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். ரசிகர்களுக்கு ரஜினி நன்றி தெரிவித்தார். அவர் தியேட்டரில் இருந்து புறப்படும்போது ரசிகர்கள் கை அசைத்து ஆரவாரம் செய்தனர். ரஜினி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

ரஜினியுடன் படம் பார்த்த ரசிகர் ஒருவர்தான் ‘கபாலி’ படத்தின் ஆரம்ப காட்சியை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Similar News