ஆன்மிகம்
வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டபோது எடுத்த படம்.

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை

Published On 2019-05-11 05:13 GMT   |   Update On 2019-05-11 05:13 GMT
பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுவையை அடுத்த பஞ்சவடியில் பிரசித்திபெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்ட போது பார்க்கப்பட்ட தேவபிரசன்னத்தில் பஞ்சவடியிலும் வெங்கடாஜலபதி எழுந்தருளுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திருப்பதியில் இருப்பது போல் அதே உயரத்தில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதியில் 7½ அடி உயரம் கொண்ட சுமார் 2 டன் எடை கொண்ட வெங்கடாசலபதி சிலை வடிவமைக்கப்பட்டது. அதனுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலைகள் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி திருப்பதி திருமலையில் இருந்து புறப்பட்டு மார்ச் 21-ந் தேதி பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து வெங்கடாசலபதி சிலை, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் 50 வீணை கலைஞர்களின் இசை கச்சேரி நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரன், அறங்காவலர்கள் யுவராஜன், ராஜகோபாலன், பழனியப்பன், செல்வம், திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.

பஞ்சவடி கோவிலில் வருகிற ஜூன் மாதம் 23-ந் தேதி ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராஜகோபுரம் மற்றும் வெங்கடாசலபதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News