ஆன்மிகம்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று ஆடித்தவசு காட்சி

Published On 2018-07-27 03:22 GMT   |   Update On 2018-07-27 03:22 GMT
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடித்தவசு காட்சி நடக்கிறது.
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைத்து நாட்களிலும் கோவிலிலும், மண்டகப்படியிலும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் யாகசாலை மண்டபத்தில் தினமும் பக்தி சொற்பொழிவுகள், தேவார இன்னிசை, பட்டிமன்றங்கள், சிறப்பு பரத நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் வருதல் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு காட்சி 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு விளா பூஜையும், 8.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மதியம் 12.05 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 2.45 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தவசுகாட்சிக்கு புறப்பாடும் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக தவசுக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசுக்காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த காட்சியை காண்பதற்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் நகர் பகுதியில் நான்கு புறங்களிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் போலீசார் செய்து உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில், நகரசபை நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News