ஆன்மிகம்

குழந்தை பாக்கியம் அருளும் ராமகிரி பைரவர்

Published On 2019-05-17 08:11 GMT   |   Update On 2019-05-17 08:11 GMT
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ராமகிரி வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவரை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு வாலீஸ்வரர் சன்னிதியை விட, காலபைரவரின் சன்னிதியே பெரிதாக உள்ளது. நின்ற கோலத்தில் காலபைரவர் காட்சிதருகிறார். அவருக்கு எதிரே அவருடைய வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள்.

‘திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். சிவபெருமானுக்கு முன் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

சென்னை - திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
Tags:    

Similar News